சென்னை, டிச.4:
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை, பா.ம.க. நிர்வாகிகள் வக்கீல்கள் பாலு, முன்னாள் எம்.எல்.ஏ. கணேஷ்குமார் ஆகியோர் திடீரென சந்தித்தனர்.
இதுகுறித்து அண்ணா தி.மு.க. வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கே. பாலு, முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பா.ம.க. வழக்கறிஞர் கே.பாலு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 17–ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதத்தை அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் சென்று வழங்கிய போது’ எனத் தெரிவித்தார்.
2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. அணியில் இடம்பெற்றிருந்த பா.ம.க., 2026 சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்த நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் தற்போது பா.ம.க. அன்புமணி தலைமையில் ஒரு பிரிவும், ராமதாஸ் தலைமையில் ஒரு பிரிவும் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் அன்புமணி பிரிவு பா.ம.க. இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த சந்திப்பு அண்ணா தி.மு.க., பா.ம.க. கூட்டணிக்கு அச்சாரம் போடுவதற்கான பேச்சுவார்த்தை தொடக்கம் என்று கூறப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி 23 இடங்களில் 5 இடங்களில் வெற்றி பெற்றது.
ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. அண்ணா தி.மு.க.வில் இருந்து விலகி பாரதீய ஜனதாவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. தற்போது அண்ணா தி.மு.க. – பா.ஜனதா கூட்டணியில் மீண்டும் பா.ம.க. இணைய உள்ளதாக தகவல் பரவி வந்தது. தற்போது பா.ம.க. நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளனர்.
![]()





