செய்திகள்

அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை வழக்கறிஞர் பாலு பேட்டி

Makkal Kural Official

சென்னை, செப். 11–

அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை வழக்கறிஞர் பாலு கூறினார்.

பா.ம.க.வில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அதன் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே பா.ம.க. தலைவர் என்ற பெயரில் அன்புமணி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில், அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பா.ம.க.வின் தலைவர்

அன்புமணி

ராமதாஸ் அறிவிப்பு பாமகவை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது. ஆகஸ்ட் .9ல் மாமல்லபுரத்தில் நடந்த பாமக பொதுக்குழுவில் பாமக தலைவர் அன்புமணியின் பதவியை நீட்டித்து தீர்மானம் போடப்பட்டது. பொதுக்குழு முடிவுகள் இந்திய தேர்தல் ஆணையத்தில் முறைப்படி தெரிவிக்கப்பட்டது. ராமதாஸ் அறிவிப்பு அன்புமணியை கட்டுப்படுத்தாது. அன்புமணி தரப்பு கூட்டிய பா.ம.க. பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. அன்புமணியின் தலைவர் பதவிக்காலத்தை 2026 ஆகஸ்ட் வரை நீட்டிப்பதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. பாமக சார்பில் ராமதாஸ் எந்த செய்தியையும் வெளியிட வேண்டாம். கட்சியின் விதிகள்படிதான் கட்சியை நடத்த முடியும்.

கட்சி விதிகளின் அடிப்படையில் பா.ம.க.வின் தலைவராக அன்புமணியே தொடர்கிறார். கட்சி விதிகளின் படி நிறுவனருக்கு நிர்வாக பணிகளை மேற்கொள்ள அதிகாரமில்லை. பா.ம.க தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மட்டுமே நிர்வாக பணிகளை மேற்கொள்ள முடியும். நிர்வாக பணிகளை மேற்கொள்ள கட்சி தலைவரான அன்புமணிக்கு மட்டுமே அதிகாரம். அன்புமணி கட்டுப்பாட்டில்தான் பாமக உள்ளது. ஒட்டுமொத்த கட்சி நிர்வாகிகள் அனைவரும் அன்புமணி பக்கம்தான் உள்ளோம்.

பா.ம.க. என்ற ஜனநாயக அமைப்பில் விதிகளின் அடிப்படையில் தான் கட்சியை நடத்த முடியும். பா.ம.க. தலைவர் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரம் இல்லை. பா.ம.க.வின் தலைவர் அன்புமணி என்றே பயன்படுத்த வேண்டும். உளவு பார்க்கும் எண்ணம் எப்போதும் அன்புமணிக்கு இருந்தது இல்லை. அன்புமணி உளவு பார்த்திருந்தால் கட்சியில் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்காது. இதுவரை பாமகவில் நிலவிய குழப்பத்துக்கு முடிவு கிடைத்துவிட்டது. தேர்தல் நேரத்தில் முடிவுஎடுக்கும் அதிகாரம் அன்புமணிக்கே உள்ளது.

வரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதை இப்போதே கூற முடியாது. கட்சியின் செய்தி தொடர்பாளராக தேர்தல் ஆணையம் கூறிய கருத்துகளை உங்களிடம் கூற வந்துள்ளேன். நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியது ராமதாஸ் தரப்பு தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *