விழுப்புரம் பட்டானூரில் திட்டமிட்டபடி நாளை சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும், வதந்திகளை நம்பாதீர்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்றைய தினம் ராமதாசின் மனைவி சரஸ்வதியின் பிறந்தநாள் என்பதால் அன்புமணி ராமதாஸ், தனது தாயார் சரஸ்வதியுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.
தாயாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ராமதாசுடன் அன்புமணி பங்கேற்ற புகைப்படங்களும் வெளியாகின. இந்நிலையில் ராமதாஸ், அன்புமணி இருவரும் பேசியதாகவும் நாளை ராமதாஸ் கூட்டியுள்ள சிறப்பு பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின. இதற்கு ராமதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி நாளை சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இதில் எந்த மாற்றமும் இல்லை. பொதுக்குழுவில் கலந்துகொள்ள வேண்டியவர்கள் அனைவரும் அவசியம் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தைலாபுரத்தில் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில் அன்புமணியுடன் எதுவும் பேசவில்லை என்று கூறினார்.
![]()





