செய்திகள்

அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்த 3 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம்: ராமதாஸ் அதிரடி

Makkal Kural Official

திண்டிவனம், ஜூலை.21-

பா.ம.க.வில் இருந்து திடீரென 3 எம்.எல்.ஏ.க்களை தற்காலிகமாக நீக்கம் செய்து ராமதாஸ் உத்தர விட்டுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது. இதுகுறித்து பா.ம.க.வின் மூத்த தலைவர்கள் இருவரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக முடிவு எட்டப்படவில்லை.

இதன் தொடர்ச்சியாக ராமதாஸ் நியமித்த நிர்வாகிகளை அன்புமணி நீக்குவதும், அன்புமணி நியமித்த நிர்வாகிகளுக்கு பதில், ராமதாஸ் புதிய நிர்வாகிகளை நியமிப்பதும் தொடர்கிறது.

இந்த சூழலில் எம்.எல்.ஏ.க்கள் 3 பேரை கட்சி உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக ராமதாஸ் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பா.ம.க. தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், தலைவருமான ராமதாசின் அனுமதியோ, உத்தரவோ இல்லாமல் எந்தவொரு முடிவையும் கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினர்களோ, மற்றவர்களோ கட்சியின் விதிகளின் அடிப்படையில் தன்னிச்சையாக செய்வது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு, ஒழுங்கீன நடவடிக்கை என்று கருதப்படும் என்பது விதி.

சமீபகாலமாக பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் சிவக்குமார் (மயிலம்), வெங்கடேஷ்வரன் (தர்மபுரி), சதாசிவம் (மேட்டூர்) ஆகிய 3 பேரும் கட்சி கட்டுப்பாட்டை மீறி செய்துவரும் செயல்கள் குறித்து சட்டமன்ற கட்சி தலைவர் ஜி.கே.மணி மூலம் கட்சியின் தலைமைக்கு கொண்டு வரப்படுகிறது.

அதன்படி, கட்சியின் தலைமை நிர்வாகக்குழு அதனை ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியது.

அந்த குழு 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் வக்கீல் கே.பாலு ஆகியோரின் செயல்பாடு களுக்கும், தமிழக சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து எம்.எல்.ஏ. அருளை, பொய்யாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டதாக கூறியதாலும் அவர்கள் மீது விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இந்த விசாரணைக்காக டாக்டர் ராமதாசின் உத்தரவின்பேரில் 4 பேரும் கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்.

மேலும் முழுமையான ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணைக்கு அவர்கள் 4 பேரும் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டியிருப்பதால் கட்சித்தொண்டர்களும், மற்ற தலைவர்களும் அவர்களிடம் விசாரணை முடியும் வரை கட்சி சம்பந்தமான எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்.

விசாரணைக்குழு 4 பேரையும் அழைத்து விளக்கம் கேட்பதற்கு முழு அதிகாரத்தையும் ராமதாஸ் அளித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *