மக்கள் குரல் பார்வையில்

அன்னை தெரசாவின் வருகை

Makkal Kural Official

1929ஆம் ஆண்டு. இளம் வயதிலேயே துறவறப் பாதையைத் தேர்ந்தெடுத்த ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்ற இளம்பெண், தன் வாழ்க்கையின் மிகப் பெரிய பயணத்தைத் தொடங்கினார். ஐரோப்பாவின் குளிர்ந்த நிலங்களிலிருந்து, வெப்பமும் வறுமையும் கலந்த இந்தியா நோக்கி அவர் வந்த நாள், மனிதநேய வரலாற்றில் மறக்க முடியாத தருணமாக மாறியது. அவர்தான் அன்னை தெரசா.

தெரசா இந்திய மண்ணில் கொல்கத்தாவில் (1929 ஜனவரி 6 ந்தேதி ) காலடி வைத்த அந்த நாளே இன்று. அவர் வாழ்நாள் முழுவதும் ஏழை–எளிய மக்களுக்காக தன்னை அர்ப்பணிக்கும் தொடக்கமாக அமைந்தது. துறவற வாழ்விற்கு (Sisters of Loreto) நுழைந்தபோது, துறவிகள் வழக்கப்படி ஒரு புதிய ஆன்மிகப் பெயரை தேர்ந்தெடுத்தார். அப்போது அவர் எடுத்துக்கொண்ட பெயர்தான் ‘தெரசா’. புனித தெரசா ஆஃப் லிசியூ (St. Thérèse of Lisieux) மீது அவருக்கிருந்த ஆழ்ந்த பக்தி.

அந்தப் புனிதர் கற்பித்த “சிறிய செயல்களையும் பெரும் அன்புடன் செய்வது” என்ற வாழ்க்கைத் தத்துவம், ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ-வின் உள்ளத்தை ஆழமாக ஈர்த்ததால் தெரசாவாகவே விஸ்வரூபே வளர்ச்சிக்கு தன்னைதானே செதுக்கிக் கொண்டார். துறவறத்தில் முழு அர்ப்பணிப்புடன் இறுதி உறுதிமொழி எடுத்தபோது, அவர் “Mother Teresa”, அன்னை தெரசா என அழைக்கப்பட்டார்.

இந்திய மண்ணில் காலடி வைத்த அந்த நாளே, அவர் வாழ்நாள் முழுவதும் ஏழை–எளிய மக்களுக்காக தன்னை அர்ப்பணிக்கும் தொடக்கமாக அமைந்தது. கொல்கத்தாவில் லொரேட்டோ மடத்தில் ஆசிரியையாகப் பணியாற்றிய அவர், குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தபோதும், பள்ளியின் சுவர்களுக்கு அப்பால் காணப்பட்ட வறுமை, நோய், பசியால் வாடும் மனிதர்கள் அவரது உள்ளத்தை உலுக்கியது. நகரின் தெருக்களில் கைவிடப்பட்ட முதியவர்கள், நோயால் தவிக்கும் குழந்தைகள், ஆதரவின்றி உயிர் துடித்த மனிதர்கள் — இவர்களின் துயரம் அவரது மனதில் ஆழமான கேள்விகளை எழுப்பியது.

“அழைப்புக்குள் அழைப்பு”:

1946 ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி, டார்ஜிலிங் நோக்கி ரயிலில் பயணித்தபோது, அவருக்குள் ஒரு ஆழ்ந்த ஆன்மிக அழைப்பு பிறந்தது. அதை அவர் “அழைப்புக்குள் அழைப்பு” என்று குறிப்பிட்டார். வசதியான மட வாழ்வை விட்டு வெளியேறி, “ஏழைகளில் ஏழைகளுக்குச் சேவை செய்ய வேண்டும்” என்ற உறுதியுடன் அவர் புதிய பாதையைத் தொடங்கினார்.

1948 ஆம் ஆண்டு, எளிய வெள்ளை புடவையில் நீல விளிம்புடன், கொல்கத்தாவின் குடிசைப் பகுதிகளில் அவர் தனியாகச் சேவை செய்ய ஆரம்பித்தார். சாலையோரங்களில் இறக்கிக் கொண்டிருந்தவர்களுக்கு கைபிடித்து இறுதி மரியாதையுடன் உயிர் விட உதவினார். நோயாளிகளின் காயங்களை சுத்தம் செய்தார். கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு தாயாக மாறினார். அன்பு, கருணை, மனித மரியாதை — இவையே அவரது ஆயுதங்களாக இருந்தன.

1950ஆம் ஆண்டு,“Missionaries of Charity”என்ற அமைப்பை நிறுவினார். 1979 ஆம் ஆண்டு, அவரது சேவை உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டு, நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது. அந்தப் பரிசுத் தொகை கூட ஏழைகளுக்கான உதவிக்கு பயன்பட வைத்தும் உள்ளார். 1997ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி, இந்திய மண்ணிலேயே அவர் தனது இறுதி மூச்சை விட்டார்.

அவரது மரணம் ஒரு வாழ்க்கையின் முடிவாக அல்ல; மனிதநேயத்தின் தொடர்ச்சியாகவே உலகம் அதை நினைவுகூர்ந்தது. ‘பெரிய செயல்கள் அல்ல; சிறிய செயல்களையே பெரும் அன்புடன் செய்தால், உலகம் மாறும்’ என்பதே அவர் வாழ்க்கை நமக்கு அறிவுறுத்தும் பாடம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *