செய்திகள்

அனில் அம்பானியின் ரூ.3 ஆயிரம் கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கம்

Makkal Kural Official

ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி :

புதுடெல்லி, நவ. 3–

ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி செய்ததாக அனில் அம்பானியின் ரூ.3 ஆயிரம் கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு எதிரான வழக்கில் சுமார் ரூ.3,084 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. இதில் மும்பையின் பாலி ஹில்லில் உள்ள வீடு, டெல்லியில் உள்ள ரிலையன்ஸ் சென்டர் மற்றும் 8 நகரங்களில் உள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்கள் அடங்கும்.

திருபாய் அம்பானி மறைவுக்குப் பிறகு, அவருடைய மகன்களான அனில் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி இடையே நிறுவனங்களை நடத்துவது தொடர்பாக மோதல் எழுந்தது. இதையடுத்து இருவரும் நிறுவனங்களைப் பிரித்துக் கொண்டனர்.

அப்போது அனில் அம்பானிக்கு டெலிகாம், பைனான்ஸ், மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை கிடைத்தது. இருப்பினும், அவரால் தனது நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்த முடியவில்லை. அவரது பல்வேறு நிறுவனங்களும் நிதி நெருக்கடியில் சிக்கின. மேலும், அவர் மீது பல்வேறு நிதி முறைகேடு புகார்களும் எழுந்தன. தற்போது அவர் மீதான வழக்குகள் இப்போது வேகமெடுத்துள்ளன.

ரூ.3 கோடி சொத்துகள்

இந்தச் சூழலில் சுமார் ரூ.3,084 கோடி மதிப்பிலான அவரது சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. கடந்த அக்டோபர் 31ம் தேதி இது தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதன்படி சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தச் சொத்துக்கள் தற்காலிகமாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டெல்லி, நொய்டா, காஜியாபாத், மும்பை, புனே, தானே, ஐதராபாத், சென்னை மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி ஆகிய பகுதிகளில் குடியிருப்பு யூனிட்கள், அலுவலக வளாகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் லிமிடெட் மூலம் திரட்டப்பட்ட நிதியைத் திசைதிருப்பி, சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாகச் சொல்லித் தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

நிதி மோசடி

2017 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.2,965 கோடியும், ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.2,045 கோடியும் யெஸ் வங்கி முதலீடு செய்திருந்தது. 2019 டிசம்பரில் இவை வாராக்கடனாக மாறி, இந்த இருநிறுவனங்களிலும் முறையே ரூ.1,353 கோடி மற்றும் ரூ.1,984 கோடி நிலுவையில் இருந்தன. ரிலையன்ஸ் நிப்பான் மியூச்சுவல் பண்ட் நிதியை நேரடியாக அனில் அம்பானி குழுமத்தில் முதலீடு செய்வது செபி விதிமுறைகளின்படி தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால், அதையும் தாண்டி, பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட மியூச்சுவல் பண்ட் நிதி, யெஸ் வங்கியின் மூலம் மறைமுகமாக அனில் அம்பானியின் நிறுவனங்களுக்குச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது. அது தொடர்பாகவே இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையில் அமலாக்கத் துறை பல்வேறு முறைகேடுகளைக் கண்டறிந்துள்ளது. அதேபோல ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்களுக்கு எதிரான மோசடி வழக்குகளிலும் அமலாக்கத்துறை தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *