செய்திகள்

அத்தியாவசிய பொருட்களை தேடிச்சென்ற காசா மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 59 பேர் பலி

Makkal Kural Official

காசா, ஜூலை 14–

இஸ்ரேல் காசா மீது நடத்தும் போர் 21 மாதங்களாக தொடரும் நிலையில், அத்தியாவசியப் பொருட்களை தேடிச் சென்ற காசா மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 59 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாலஸ்தீனத்தில் உள்ள காசா மக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட தற்போது வரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரானது 21 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உணவு, அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தொடர்ந்து காசா மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

59 பேர் பலி

இந்நிலையில், தெற்கு காசாவில் ரஃபாவுக்கு அருகே இஸ்ரேல் ஆதரவுடன் அமெரிக்கா நடத்தி வரும் அத்தியாவசிய உதவிகள் வழங்கும் மையத்திற்கு காசா மக்கள் சென்றனர். அவர்கள் செல்லும் வழியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 31 பேர் உயிரிழந்தனர். மேலும் இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 28 பேர் உயிரிழந்தனர்.

ஹமாஸ் சரணடைந்து, ஆயுதங்களைக் களைந்து, நாடுகடத்தப்பட்ட பின்னரே போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வந்து இஸ்ரேலியப் படைகளை முழுமையாகத் திரும்பப் பெறுவதற்கு ஈடாக, மீதமுள்ள 50 பணயக்கைதிகளையும், சுமார் 20 பேர் உயிருடன் இருப்பதாகக் கூறப்படும் அனைவரையும் விடுவிக்கத் தயாராக இருப்பதாக ஹமாஸ் கூறுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *