சென்னை, ஆக. 12–
அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
தமிழக அரசியலில் பாஜ – அதிமுக – பாஜ என பல முறை கட்சி மாறியவர் மைத்ரேயன். இவர், 1990களில் பாஜவில் இணைந்தார். அந்த கட்சியில் மாநில அளவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த மைத்ரேயன், 2000ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அண்ணா தி.மு.க.வில் இணைந்தார்.
2002ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பியாக பதவி வகித்தார். ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுகவில் பழனிசாமி – பன்னீர் செல்வம் அணிகள் இடையே மோதல் ஏற்பட்டபோது, பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக இருந்த மைத்ரேயன், 2022ல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து, மீண்டும் பாஜவில் இணைந்த அவர் அந்த கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் கடந்த ஆண்டு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அண்ணா திமுகவில் இணைந்தார். அவருக்கு அண்ணா தி.மு.க.வின் அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.முகவில் இணைந்தார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், தி.மு.க. தலைமை நிர்வாகிகள் உடனிருந்தனர்.
முன்னதாக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தி.மு.க.வில் இணைந்தார். தற்போது முன்னாள் எம்பி மைத்ரேயன் தி.மு.க.வில் இணைந்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக உள்ளது.
![]()





