செய்திகள்

அதிபர் டிரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவை: அமெரிக்க நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Makkal Kural Official

வாஷிங்டன், ஆக. 30–

அதிபர் டிரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் அனைத்து வரிகளும் தொடர்ந்து அமலில் உள்ளதாக டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பிறகு, உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி இந்தியாவுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். அத்துடன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதால், கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார். அதன்படி இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு கடந்த 27ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இதற்கிடையில் டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள வர்த்தக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அவரின் அதிகார மீறலாகும் என்று விமர்சித்து, அனைத்து உத்தரவுகளும் நிரந்தரமாக ரத்து செய்வதாக தெரிவித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மனு தாக்கல் செய்தது.இந்த மனுவை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என்றும், இத்தகைய வரிகளை விதிக்க டிரம்ப்புக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது. எனினும், வரி விதிப்புகளை ரத்து செய்ய மறுத்துவிட்ட நீதிமன்றம், தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கால அவகாசம் வழங்கியிருக்கிறது.

வரியை நீக்கினால் பேரழிவு

இந்த உத்தரவின் மூலம், இந்தியா மீது டிரம்ப் விதித்த வரிகள் ரத்தாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை அடுத்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், தீர்ப்பு மிகத் தவறானது, அனைத்து வரிகளும் நடைமுறையில் இருக்கின்றன என்று குறிப்பிட்டிருக்கிறார்.நம்முடைய வரி விதிப்புகள் நீக்கப்பட வேண்டும் என்று தவறான தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனால், அவர்களுக்குத் தெரியும், இறுதியில் நாம்தான் வெல்வோம் என்று, என டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சமூகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை, அமெரிக்க வரிகள் நீக்கப்பட்டால், அது நாட்டுக்கு பேரழிவாக மாறிவிடும். வர்த்தக சமநிலையின்மை மற்றும் நியாயமற்ற வரிகளை தொடர்ந்து நாடு தாங்கிக் கொண்டிருக்க முடியாது, இதர நாடுகள் அமெரிக்காவுக்கு விதிக்கும் வரிகளை நாம் தாங்கிக் கொண்டிருக்க வேண்டுமா அது நண்பர்களாக இருந்தாலும் சரி எதிரிகளாக இருந்தாலும் சரி என்று குறிப்பிட்டுள்ளார்.

தன்னால், உலக நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரி விதிப்பு என்பது, வர்த்தகப் போர் என்று குறிப்பிடும் டிரம்ப், இதுதான் அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களைக் காக்க மிகச் சிறந்த கருவி என்றும் குறிப்பிட்டுள்ளார்.இத்தனை ஆண்டுகளாக, பல நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக வரி விதித்து வந்தன. ஆனால், இப்போது, அமெரிக்காவை பணக்கார, பலமான, அதிகாரம் கொண்ட நாடாக மாற்ற நான் உச்ச நீதிமன்றத்தின் உதவியுடன் மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்துப் போராடுவேன் என கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *