அலங்காநல்லூர், ஜன. 17–
ஜல்லிக்கட்டில் அதிகக் காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
பொங்கல் பண்டிகையொட்டி ஆண்டுதோறும் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்கநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.
இந்த நிலையில் இன்று உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாய் துவங்கியது. போட்டியை அமைச்சர் பி. மூர்த்தி கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரைக்கு வந்தார். விமான நிலையத்தில் இருந்து அலங்காநல்லூர் வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு சாலைகளின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண காலை 11.10 மணியளவில் விழா மேடை திடலுக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் பி. மூர்த்தி பொன்னாடை அணிவித்து வரவேற்றார். முதல்வருக்கு கலெக்டர் பிரவீன் குமார் காளை மாட்டு வண்டியை பரிசாக வழங்கினார்.

இதனை தொடர்ந்து விழா மேடையில் அமர்ந்தவாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியை கண்டுகளித்தார். வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளையும், காளையர்களின் வீரத்தையும் நேரில் பார்வையிட்டு மகிழ்ந்தார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காளைகளின் உரிமையாளர் ராஜேஷ் என்பவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தங்கம் மோதிரம் அணிவித்து கவுரவப்படுத்தினார். அதைத் தொடர்ந்து அலங்காநல்லூர் மக்களுக்கு 2 அறிவிப்புகளையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் மாடுபிடி வீரர்களின் நீண்டநாள் கோரிக்கையான சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றினார்.
2 அறிவிப்புகளை
வெளியிட்டார்
முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது:–
உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். அதே நேரத்தில், உங்கள் அனைவருக்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துகளையும், புத்தாண்டு வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த மதுரை மண் என்பது, வீரம் விளைந்த மண்ணாகும். அப்படிப்பட்ட இந்த மண்ணின் வீரவிளையாட்டான உலகப் புகழ் பெற்றிருக்கக்கூடிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பார்க்கும்போது நமக்கெல்லாம் வீரம் வருகிறது. அதனை அடக்குகின்ற காளையர்களை பார்க்கின்றபோது நம்முடைய தமிழ் மண்ணுக்கு பெருமையாக இருக்கிறது.
நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், இந்த வீரம் விளைந்த மதுரை மண்ணில், சங்கம் வளர்த்த இந்த மாமதுரையில், அறிவு வளர்ச்சிக்காக “கலைஞர் நூற்றாண்டு நூலகம்” கட்டிக் கொடுத்திருக்கிறோம் என்பது உங்களுக்கு எல்லாம் தெரியும்.
அதேபோல, தமிழர்களின் அடையாளமான இந்த வீர விளையாட்டுக்கு “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல்” அரங்கமும் கட்டிக் கொடுத்திருக்கிறோம் என்பதும் ஒரு மிகப் பெரிய சாதனையாகும்.
இதனை சொல்லுகின்ற நேரத்தில், இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய ஜல்லிக்கட்டைப் பார்க்க முதலமைச்சராக வந்திருக்கக்கூடிய நான் ஏதாவது அறிவிப்புகளை வெளியிட்டுச் சென்றால்தான் உங்களுக்கும் திருப்தி, எனக்கும் திருப்தியாக இருக்கும். அதனால், இரண்டு அறிவிப்புகளை நான் மகிழ்ச்சியோடு உங்களிடத்தில் அறிவிக்க விரும்புகிறேன்.
முதல் அறிவிப்பு:– பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்குபெற்று, அதிக காளைகளை அடக்கி, சிறந்து விளங்கக்கூடிய வீரர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில், கால்நடை பராமரிப்பு துறையில், உரிய அரசு பணி இடங்களுக்கு, பணி அமர்த்திட வழிவகை செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இரண்டாவது அறிவிப்பு:– உலகப் புகழ் பெற்ற தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான அலங்காநல்லூர் பகுதியில், சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் 2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இரண்டு அறிவிப்பும் உங்களுக்கு மகிழ்ச்சி தானே! அந்த மகிழ்ச்சியோடு தமிழர்கள் எல்லோரும் வெல்வோம் ஒன்றாக என்று கூறி விடைபெறுகிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
அதனைத் தெடர்ந்து, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் சிறப்பு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்க தமிழ்ச்செல்வன், சு. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, ஆ. வெங்கடேசன், பூமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன்குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
உறுதிமொழி ஏற்பு
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா இன்று காலை 7 மணிக்கு காளியம்மன் கோவில் முன்பாக உள்ள வாடிவாசலில் அரசு வழிகாட்டுதல் படி தொடங்கியது. முன்னதாக மாவட்ட கலெக்டர் கே.ஜே.பிரவீண்குமார், அமைச்சர் பி.மூர்த்தி, தலைமையில் கூடுதல் கலெக்டர் காளீஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன், எம்.எல்.ஏ வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், ஜல்லிக்கட்டு விழா குழுவினர் ஆகியோர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து மரியாதை காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட 1137 காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டன. தகுதி பெற்ற 933 வீரர்கள் ஒவ்வொரு சுற்றாக மருத்துவ பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர்.
விழா குழுவினர் தங்கம், வெள்ளி நாணயம், சைக்கிள், கட்டில், பீரோ, விலை உயர்ந்த டிவி, விவசாய இடுபொருட்கள் பரிசாக வழங்கினர். சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக தமிழக துணை முதலமைச்சர் சார்பாக கார் மற்றும் இரண்டாம் பரிசு பெறும் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு இரு சக்கர வாகனம் உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கும் சொகுசு காரும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டரும் பரிசாக வழங்கப்பட இருக்கிறது. 2ம் பரிசை வெல்லும் மாடுபிடி வீரர் மற்றும் காளைக்கு பைக் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.
மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க 35 டாக்டர்கள் உட்பட 120 மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். அலங்காநல்லூர் பேரூராட்சி முழுவதும் ஆங்காங்கே எல்.இ.டி திரை மூலம் ஜல்லிக்கட்டை அனைவரும் பார்க்கும் வகையில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டது.
போட்டியை காண அதிகாலை முதலே பல்வேறு ஊர்களில் இருந்து பார்வையாளர்கள் குவிந்தனர். இவர்கள் கண்டுகளிக்கும் வகையில் கேலரிகள் அமைக்கபட்டு இருந்தது. தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி மேற்பார்வையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் சுமார் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
![]()





