புதுடெல்லி, அக்.27-
அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. நிறுவனம் முதலீடு செய்த முடிவுக்கு வெளிநபர்கள் தலையீடுதான் காரணம் என்று அமெரிக்க பத்திரிகை வெளியிட்ட செய்திக்கு எல்.ஐ.சி. மறுப்பு தெரிவித்துள்ளது.
பிரபல தொழில் அதிபர் கவுதம் அதானிக்கு சொந்தமான அதானி போர்ட்ஸ் அண்ட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் நாட்டின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. கடந்த மே மாதத்தில் 57 கோடி டாலர் (ரூ.5 ஆயிரம் கோடி) முதலீடு செய்தது. இதுபற்றி சமீபத்தில் அமெரிக்க பத்திரிகையான ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டது.
அதில், சர்வதேச முதலீட்டாளர்கள் அதானி குழுமத்தில் முதலீடு செய்ய தயங்கும் நேரத்தில், மத்திய அரசு அதிகாரிகளின் தலையீட்டால், முதலீடு செய்யும் முடிவை எல்.ஐ.சி. எடுத்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும், அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. செய்த முதலீடுதான் மற்ற முதலீடுகளை விட அதிகம் என்ற அர்த்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, எல்.ஐ.சி.யை விட அமெரிக்க நிறுவனங்கள் அதிகமாக முதலீடு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம், அமெரிக்காவை சேர்ந்த அதேன் இன்சூரன்ஸ் நிறுவனம், அதானிக்கு சொந்தமான மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனத்தில் ரூ.6 ஆயிரத்து 650 கோடி முதலீடு செய்தது. இதே நிறுவனம், மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனத்தில் முன்பு ஒருதடவையும் முதலீடு செய்துள்ளது.
மேலும், அதானி குழுமத்தின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தில், டி.பி.எஸ். வங்கி, டி.இசட். வங்கி, ரபோ வங்கி, பேங்க் சினோபாக் உள்ளிட்ட சர்வதேச முதலீட்டாளர்கள் 25 கோடி டாலர்கள் முதலீடு செய்தனர். மொத்தத்தில் நடப்பு ஆண்டின் முதல் பாதியில் அதானி குழுமம் 1,000 கோடி டாலர்கள் முதலீடு திரட்டி உள்ளது.
எல்.ஐ.சி. மறுப்பு
வாஷிங்டன் போஸ்ட்’ செய்திக்கு எல்.ஐ.சி. நிறுவனம் நேற்று மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எல்.ஐ.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அமெரிக்க பத்திரிகை செய்தி, பொய்யானது, அடிப்படையற்றது, உண்மைக்கு அப்பாற்பட்டது. சுதந்திரமாகவும், நிர்வாக குழு ஒப்புதல் அளித்த கொள்கைகளின்படியும், மிகுந்த கவனத்துடனும் அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளோம். நாட்டின் முன்னணி 500 நிறுவனங்களில் எங்களது முதலீடு கடந்த 10 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளது.
அதாவது, ரூ.1.56 லட்சம் கோடியில் இருந்து ரூ.15.6 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதானி குழுமம் பெற்ற முதலீடுகளில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் முதலீடு வெறும் 2 சதவீதத்தை விட குறைவு ஆகும். மேலும், அதானி குழுமத்தை விட ரிலையன்ஸ், ஐ.டி.சி., டாடா குழுமம் ஆகியவற்றில்தான் எல்.ஐ.சி. அதிக பங்குகளை வைத்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதானி குழுமம்
எல்.ஐ.சி.யின் முதலீட்டு முடிவுகளில் மத்திய அரசு நேரடியாகவோ, மறைமுகமாகவோ தலையிடுவது இல்லை என்று எல்.ஐ.சி. முன்னாள் தலைவர் சித்தார்த்த மொஹந்தி கூறியுள்ளார்.
அதுபோல், அதானி குழும உயர் அதிகாரி ஜுகேஷிந்தர் சிங், ‘‘நிதி பற்றி வாஷிங்டன் போஸ்ட் எழுதுவது, தலை நிறைய முடி வளர்ப்பது பற்றி நான் எழுதுவது போன்றது (அவரது தலையில் முடி கிடையாது). அதில் தவறுகள் காணப்படுகின்றன’’ என்று கூறினார்.
![]()





