சென்னை, ஜன. 21–
ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த அண்ணா திமுக முன்னாள் அமைச்சரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான வைத்திலிங்கம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றுபட்ட அண்ணா தி.மு.க. என்ற கோஷத்தை முன்வைத்து அரசியல் நடத்தி வருகிறார். ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்திருந்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மாற்றுகட்சிகளில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். அவரது அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்தார். அதேபோல், ஜே.சி.டி. பிரபாகர் த.வெ.க.வில் ஐக்கியமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த வழக்கறிஞர் சுப்புரத்தினம், திமுகவில் இணைந்த இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
எம்.எல்.ஏ. பதவியை
ராஜினாமா செய்தார்
சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வைத்திலிங்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் இருந்து நேராக அண்ணா அறிவாலயம் சென்ற அவர், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வில் திமுக தலைமை கழக நிர்வாகிகள், கரூர் மாவட்ட திமுக செயலாளர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றவரான வைத்திலிங்கம் திமுகவில் இணைந்துள்ள நிலையில், அது வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
காலியாக உள்ள
5 தொகுதிகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளநிலையில் தற்போது 5 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது. ஆலங்குளம் தொகுதி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தார். அதேபோல், கோபி செட்டிப்பாளையம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.ஏ.செங்கோட்டையன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். மேலும், வால்பாறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 21-ந் தேதி மரணம் அடைந்ததால், அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. சேந்தமங்கலம் தொகுதி பொன்னுச்சாமியும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி காலமானார். இதனால், அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. தமிழக சட்டசபைக்கு அடுத்த 2 மாதங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால், எந்தத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை. எம்.எல்.ஏ. காலியிடமும் 5 ஆக உயர்ந்துள்ளது.
அண்ணா திமுக சுதந்திரமாக
செயல்படவில்லை: வைத்திலிங்கம்
திமுகவில் இணைந்த பிறகு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அண்ணா தி.மு.க. செயல்படுவது உகந்ததாக இல்லை. இன்று தமிழ்நாடு முதல்வரை தமிழக மக்கள் போற்றுகிறார்கள். எல்லாருடைய தேவைகளையும் பூர்த்தி செய்து மக்கள் மனதில் உள்ளார் ஸ்டாலின். அதனால் அண்ணா தொடங்கிய தாய்கழகத்தில் இணைந்துள்ளேன். அண்ணா திமுக சுதந்திரமாக செயல்படவில்லை. சர்வாதிகாரமாக செயல்படுகிறது. கூட்டணி தொடர்பான முடிவில் ஓபிஎஸ் தாமதம் செய்ததால் திமுகவில் இணைந்துள்ளேன்.அதிமுகவில் சேருமாறு தனிப்பட்ட முறையில் அழைப்பு வந்தது ஆனால் தனியாக இணைய விரும்பவில்லை. பிரிந்தவர்கள் ஒன்றாக சேர வேண்டும் என்ற நோக்கில் நான் அதிமுகவிற்கு செல்லவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், தேர்தல் நெருங்கி வரும் சூழலில் விரைவில் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் இருந்ததாகவும், ஆனால் ஓபிஎஸ் தரப்பில் முடிவெடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், அண்ணா தி.மு.க.வின் இரு அணிகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற தனது முயற்சிக்கு உரிய பலன் கிடைக்காததே தனது விலகலுக்குக் காரணம் என்றும் குறிப்பிட்டார். தன்னைத் தொடர்ந்து அண்ணா தி.மு.க.வின் பல மாவட்டச் செயலாளர்கள் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாகவும்,26-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட இணைப்பு விழாவில் பலர் இணைய வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.
![]()





