சென்னை, டிச.26-–
அண்ணா தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி உள்ளன. அண்ணா தி.மு.க. தலைைமயிலான கூட்டணியில் பாரதீய ஜனதா மட்டும் தற்போது இடம் பெற்றிருந்தாலும், விரைவில் சில கட்சிகள் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாரதீய ஜனதாவின் மத்திய மந்திரி பியுஷ் கோயலுடன் முதல் சுற்று பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறார்.
அதில் எந்தெந்த கட்சியை கூட்டணியில் சேர்ப்பது, எவ்வளவு இடங்களை தருவது, கூட்டணியை பலப்படுத்துவது, தேர்தல் வியூகம் ஆகியவை குறித்து பேசப்பட்டு இருக்கிறது. இந்தநிலையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக அண்ணா தி.மு.க. தனி குழு அமைத்துள்ளது.
தேர்தல் அறிக்கை
இதுதொடர்பாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 17–வது சட்டமன்றப் பேரவைக்கான பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அண்ணா தி.மு.க. சார்பில், மக்களுக்கு பல்வேறு வகைகளில் நலம் பயக்கும் வகையிலான தேர்தல் அறிக்கையினை தயார் செய்வதற்காக, அண்ணா தி.மு.க. சார்பில் 10 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்படுகிறது.
அந்த குழுவில், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் இரா. விசுவநாதன், சி. பொன்னையன், பொள்ளாச்சி வி. ஜெயராமன், டி.ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செ.செம்மலை, பா. வளர்மதி, ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், எஸ்.எஸ். வைகைச்செல்வன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பல்வறுே தரப்பட்ட மக்களின் கருத்துகளையும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய தரவுகளையும் பெற்று வரும் வகையிலான சுற்றுப் பயணத் திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
![]()





