சென்னை, டிச.10:
அண்ணா தி.மு.க. தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெறும் அண்ணா தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 4 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்திற்கு கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்க வேண்டும். ஆனால், செயற்குழு கூட்டம் தொடங்கியதும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவர் பேசும்போது,”கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால், கட்சியின் சட்டதிட்ட விதிகளின்படி, தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி தேர்வு செய்யப்படுகிறார். அவர் இந்த கூட்டத்தை நடத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த இந்த தீர்மானத்தை கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்தார். அதனைத் தொடர்ந்து மேடையில் இருந்த கே.பி.முனுசாமி, எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். அதனைத் தொடர்ந்து கே.பி.முனுசாமி தலைமையில் அண்ணா தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றது.
![]()





