கதைகள் சிறுகதை

அண்ணா சாலை..! சாலை 1- ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

ஆகஸ்ட் – 22 சென்னை நாள் கொண்டாட்டத்திற்காக சென்னை நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது.

” மனுசங்களுக்குப் பிறந்த நாள் கொண்டாடுறது மாதிரி, நம்ம சென்னைக்கு இன்று பிறந்த நாள். நம்ம எல்லாரையும் தாய் மடியா தாங்கற சென்னைய நாம சீராட்டிப் பாராட்டி வாழ்த்தணும்.”

என்று பேசிக் கொண்டிருந்தார்கள், விழாக் குழுவினர்.

தமிழரசன், அன்று காலையிலிருந்தே பரபரப்பாக இருந்தான். அவனின் முனைவர் பட்ட வாய் மொழித் தேர்வும் அன்று தான் நடக்க இருந்தது. ஐந்து ஆண்டுகள் கடுமையான உழைப்புக்கு இன்று பட்டாபிஷேகம் கிடைக்கப் போகிறது என்பதில் அவனுக்கு அலாதி ஆனந்தம். பல்கலைக்கழகம் முழுவதும் மாணவர்களும், ஆசிரியர்களும் குழுமியிருந்தார்கள். வேறு சில பல்கலைக்கழகத்திலிருந்தும் பேராசிரியர்கள், மாணவர்கள் வந்திருந்தார்கள். ” வாழ்த்துகள் தமிழரசன் ” ” கன்கிராசுலேஷன்ஸ் ” “

இந்த முனைவர் பட்டம் உங்கள எங்கயோ கூட்டிட்டுப் போகப் போகுது. இன்னைக்குச் சென்னை தினம் வேற? எப்படி ஒரு சாலப் பொருத்தம். எல்லாம் காலம் இட்டக் கட்டளைப்படி தான் நடக்குது. உங்களுக்கும் சென்னைக்கும் ஏதோ ஒரு பிணைப்பு இருக்குன்னு நினைக்கிறேன். அது தான் இன்னைக்கு உங்கள் முனைவர் பட்ட வாய் மொழித் தேர்வு வந்திருக்கு ” என்று தமிழரசனை வாழ்த்தினார்கள், நண்பர்கள்.

” ரொம்ப நன்றி. உங்க வாழ்த்துக்கும், அக்கறைக்கும் ரொம்ப நன்றி ” என்று தன் இரு கைகளையும் எடுத்துக் கும்பிட்டான், தமிழரசன்.

வாய் மொழித் தேர்வு நடக்கும் திருவள்ளுவர் அரங்கத்தில் பேராசிரியர்கள், மாணவர்கள் கூடியிருந்தார்கள். ஆயிரம் பக்கங்கள் கொண்ட தன் முனைவர் பட்ட ஆய்வேட்டைத் தூக்க முடியாமல் தூக்கி வந்தான்,தமிழரசன்.

“அனைவருக்கும் வணக்கம். நம்ம பல்கலைக்கழகத்தின் மாணவர் தமிழரசனுடைய முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வுக்காக வந்திருக்கும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன்.இன்னும் சிறிது நேரத்தில் தமிழரசன் தன் முனைவர் பட்டத்திற்கான வாய்மொழித் தேர்வைத் தொடங்குவார்,

என்று பேசினார், தமிழ்த் துறைத் தலைவர் இரா. மோகன்.

சிறிது நேரத்தில் தன் முனைவர் பட்ட ஆய்வு நூலைப் பல்கலைக்கழக சிறப்புப் பேராசிரியர்களிடம் சமர்ப்பித்தான், தமிழரசன். இருக்கையில் இருந்த மாணவர்கள் எல்லாம் தமிழரசனைப் பற்றிச் சொல்லிச் சொல்லி ஆரவாரம் செய்தார்கள்.

“எல்லாருக்கும் வணக்கம் .நான் தமிழரசன் .முதுகலைப்பட்டம் முடிச்ச பிறகு, அடுத்து முனைவர் பட்டம் படிக்கணும்னு ஆசப்பட்டேன்.யார் யார் என்னென்ன தலைப்பிலயோ முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்றாங்க. எல்லாரும் செய்ற மாதிரி நாம செய்யக் கூடாதுன்னு தீர்க்கமா இருந்தேன்.

“சாலைகளின் கதைகள் ” அப்படிங்கிற தலைப்பில நான் முனைவர் பட்டத்துக்கு தயாரானேன். அதுக்காக தமிழ்நாட்டில இருக்கக்கூடிய எல்லா சாலைகளுக்கும் நான் பயணம் செஞ்சு இருக்கேன் .அந்தச் சாலைகளின் இன்பங்கள், துன்பங்கள், துயரங்கள், மகிழ்ச்சிகள், கவலைகள் அத்தனையும் ஆராய்ச்சி பண்ணியிருக்கேன். அவ்வளவும் வியப்பா இருந்துச்சு.

ஒவ்வொரு மனுஷனும் வீட்ல இருந்து வெளியே வந்ததும், சாலைகள்ல தான் பயணிக்கிறோம். சாலைகள்ல இருந்து தான் நம்முடைய வாழ்க்கையே ஆரம்பமாகுது. இதனால சாலைகள் பற்றி ஆராய ஆரம்பிச்சேன். இந்த மொத்த புத்தகத்திலயும் தமிழ்நாட்டினுடைய எல்லா சாலைகளைப் பற்றிய விஷயங்கள் அடங்கி இருக்கு .ஒவ்வொரு சாலைகளையும் நான் சொல்லப் போறேன். இப்ப ஒரே ஒரு சாலையை மட்டும் நான் உங்களுக்கு சொல்ல நினைக்கிறேன். அது சென்னையில் முதன்முதலாக சுமார் நானூறு வருஷத்துக்கு முன்னாடி உருவான அண்ணா சாலை தான் அது. என்னுடைய ஆய்வினுடைய முதல் சாலையே அண்ணா சாலை தான்.

இந்த அண்ணா சாலைக்கு முதல்ல மவுண்ட் ரோடுன்னு பேரு. சென்னையில இது ரொம்ப முக்கியமான சாலை. பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த முன்னாள் சென்னை கவர்னர் சார்லஸ் மகார்த்தனே காலத்தில தான் இந்தச் சாலையைப் போட்டு இருக்காரு. இந்தச் சாலையாேட நீளம் பதினைந்து கிலோமீட்டர். இந்தச் சாலை, புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து தாமஸ் மவுண்ட் சாலை வரைக்கும் நீளுது.

பிரிட்டிஷ் நிறுவனத்தில் ஐரோப்பிய பணியாளர்கள் ஜார்ஜ் தொழிற்சாலையில் இருந்து இறைத்தூதர் செயின்ட் தாமஸ் மவுண்டுக்கு பயணம் செய்யப் போடப்பட்ட இந்த வண்டி சாலை தான், பின்னால மவுண்ட் ரோடா மாறிச்சு. அதுக்கப்புறம் இந்த சாலைக்கு மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவா அண்ணா சாலைன்னு பேரு மாற்றப்பட்டுச்சு. என்று அண்ணா சாலையைப் பற்றி தமிழரசன் சொல்லச் சொல்ல வியப்பில் ஆழ்ந்தார்கள், பார்வையாளர்கள்.

” தன்னுடைய ஆய்வ மிகச் சிறப்பா பண்ணியிருக்காரு தமிழரசன் ” என்று பேராசிரியர்கள் வாழ்த்த மறுபடியும் தன் ஆய்வைத் தொடர்ந்தார், தமிழரசன்.

இந்த சாலைகள்ல இந்திய அரசினுடைய பல்வேறு தொழிற்சாலைகள், தமிழ்நாட்டினுடைய பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள். அதன் தலைமை இடங்கள் எல்லாம் இருக்கு.அதனால அண்ணா சாலையிலே இருக்கக்கூடிய எல்லா விஷயங்களும் உலகத்தரமானது. உதாரணமா, அண்ணா அறிவாலயம், காமராஜர் அரங்கம், ஸ்பிக் கட்டடம்,சின்னமலை,கலைஞர் தொலைக்காட்சி,தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்,மறைமலை அடிகள் பாலம், ஸ்பென்சர், எல்ஐசி இப்படி எத்தனையோ விஷயங்கள் அண்ணாசாலையில இருக்கு. அதனால முதன் முதலாக இந்த அண்ணாசாலைய என் ஆய்வின் ஆரம்பமா எடுத்துக்கிட்டதில ரொம்ப மகிழ்ச்சி” என்று சொன்னார் தமிழரசன். அவர் பேசுவதைக் கேட்ட சிலர்

” நாமளும் நிறைய தடவை அண்ணா சாலையில பயணம் செஞ்சிருக்கோம். ஆனா, அண்ணா சாலையின் வரலாறு, பெருமை இதெல்லாம் நமக்குத் தெரியலையே ? ” என்று ஒருவர் வியக்க

“நாம சிக்னலை மட்டும் தான் பாத்துட்டுப் போறோம். எதுக்காக அண்ணா சாலைன்னு பேர் வந்ததுன்னு யாரும் அதையெல்லாம் பார்க்கிறது இல்லை” என்று ஒரு மாணவர் கேட்க,

” குதிரைய அடக்குற மாதிரி சிலை ஒன்னு அண்ணா மேம்பாலத்தில இருக்கு. இது எதுக்கு வச்சிருக்காங்கன்னு எத்தனை பேருக்குத் தெரியும்? என்று தமிழரசனே கேள்வி கேட்க, சிலர் பதில் சொன்னார்கள். சிலர் முணுமுணுத்தார்கள்.

” சரி, எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கும். நானே அதச் சொல்றேன். ரொம்ப வருசமா சென்னையில நடந்திட்டு இருந்த குதிரைப் பந்தயத்த நிறுத்துற துக்காகத் தான் இந்தச் சிலையை வச்சாங்க “

என்று தமிழரசன் சொல்ல, சிலர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்கள்.

” இவர் சொல்றது சரி” என்று சிலர் தலையசைத்தார்கள்.

” இந்தச் சாலைகளின் கதைகள் ரொம்ப நல்லா இருக்கே? பிரமாதம்… அடுத்து என்ன சாலையச் சொல்லப் போறீங்க? என்று மாணவர் கேட்க

” இன்னும் நிறையச் சாலைகள் இருக்கு. கண்டிப்பா ஒன்னு ஒன்னா சொல்றேன்” என்று தமிழரசன் சொல்ல ” மன்னிக்கனும்.ஒரு முக்கியமான ஒரு செய்தி தமிழரசன் “

என்று தமிழரசனை அழைத்தார், ஒருவர். ” என்ன? ” என்று சைகையில் கேட்டான், தமிழரசன்.

“இன்னைக்கு சென்னையோட 386வது பிறந்தநாள். சென்னையோட பிறந்தநாள் அன்னைக்கு ,சென்னையோட முதல் சாலைய நீங்க சொன்னது ரொம்ப பெருமையா இருக்கு. சென்னையின் பிறந்த நாள் விழாவுல உங்களச் சிறப்பு பிரதிநிதியா பேசக் கூப்பிட்டு இருக்காங்க. நீங்க தான் சென்னையப் பத்திப் பேசணும்” என்ற வந்தவர் சொல்ல “அப்படியா? ” என்று ஆச்சரியமாய்க் கேட்டான், தமிழரசன் .

“ஆமா .. இன்னைக்குச் சாயங்காலம் நீங்க தான் சென்னையப் பத்தியும் சாலைகள் பத்தியும் பேசப் போறீங்க “

என்று சொல்லவும், ஆரவாரத்தில் நிறைந்தது, திருவள்ளுவர் அரங்கம்.

” சரி… எல்லாரும் கொஞ்ச நேரம் பிரேக் எடுத்துக்கலாமா ?. டீ சாப்பிட்டு வந்து அடுத்த சாலையச் சொல்றேன் “

என்றான் தமிழரசன் .

அது வரையில் அமைதியாக இருந்த திருவள்ளுவர் அரங்கம், அண்ணா சாலையைப் பற்றி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தது.

அடுத்த சாலை என்னவாக இருக்கும்? என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *