சென்னை, டிச. 20–
சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தென் மண்டல பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 8 மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில் 2 முதல் 4-ம் தளத்தில் தீப்பிடித்த நிலையில் தீ கீழிருந்து மேலாக ஒவ்வொரு மாடிக்கும் பரவியது. காலை நேரம் என்பதால் அலுவலத்தினுள் ஒரு சில ஊழியர்கள் மட்டுமே இருந்த நிலையில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதியே புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனால் அண்ணா சாலையில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியது.
தீ விபத்தால் ஏராளமான மின்சாதனப் பொருட்கள் சேதம் அடைந்தது. சம்பவ இடத்திற்கு பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். அலுவலகத்தில் முழு சோதனை நடத்தப்பட்ட பின்பே சேதவிவரங்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்புனஸ் சேவை
முடங்கியது
அண்ணாசாலை பகுதியில் பி.எஸ்.என்.எல் இண்டர்நெட், தொலைபேசி சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் ஆன்லைன் விண்ணப்பம், பணம் செலுத்துதல், புகார் பதிவு உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்து காரணமாக சர்வர் அறை உள்ள கட்டிடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அவசர அழைப்புகளை மேற்கொள்ள முடியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சென்னையில் மட்டும் சுமார் 70க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் 108 நெட்வொர்க்கில் இயங்கி வருகின்றன. இந்த தீ விபத்து காரணமாக சென்னையில் 108 ஆம்புலன்ஸ் சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது.
இணைய சேவையும் பாதிப்பு
அதேபோல பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இணைய சேவையும் இந்த தீ விபத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சென்னையில் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை பயன்படுத்துபவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மின்வாரிய இணைய சேவையும் முடங்கியுள்ளது. இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
![]()





