சிதம்பரம், ஜன. 10:
அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தின் இயற்கை மற்றும் வளம்குன்றா வேளாண் மையம் மற்றும் பெங்களூருவில் உள்ள மண்டல அங்கக மற்றும் இயற்கை வேளாண் மையம் ஆகியவை இணைந்து, “இயற்கை மற்றும் அங்கக வேளாண்மை” குறித்த மண்டல மாநாடு நடைபெற்றது
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 130-க்கும் மேற்பட்ட முன்னோடி இயற்கை விவசாயிகள் மற்றும் வேளாண் ஆர்வலர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.
விழாவின் தொடக்கத்தில், இயற்கை மற்றும் வளம்குன்றா வேளாண் மையத்தின் இயக்குனர் ஆர். ராமன் வரவேற்புரை ஆற்றினார். வேளாண் புல முதல்வர் கே. ஹரிப்பிரியா பேசுகையில், நீண்டகால உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை உறுதி செய்ய இயற்கை மற்றும் அங்கக வேளாண் முறைகளுக்கு மாறுவது இன்றைய காலத்தின் கட்டாயம் என்று வலியுறுத்தினார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் எஸ். அறிவுடைநம்பி மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசினார். தற்போதைய உலகளாவிய சூழலில், மண்ணின் வளம் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க இயற்கை வேளாண்மை என்பது ஒரு விருப்பம் அல்ல, அது ஒரு கட்டாயத் தேவை என்று அவர் குறிப்பிட்டார்.
இயற்கை வேளாண் நிபுணர் கேத்தனூர் பழனிச்சாமி சிறப்புரையில், இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்வதிலுள்ள நுட்பங்களையும் அதன் அபரிமிதமான வாய்ப்புகளையும் விளக்கினார்.
மண்டல அங்கக மற்றும் இயற்கை வேளாண் மையத்தின் இயக்குநர் வீரேந்தர் குமார் வர்மா, இயற்கை வேளாண் ஆலோசகர் ஏ. சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் 5 தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெற்றன. மேலும், மற்றும் நிபுணர்கள் கலந்துகொண்டு இயற்கை வேளாண்மையின் பல்வேறு பரிமாணங்களைப் பகிர்ந்து கொண்டனர். முடிவில் விஞ்ஞானி எஸ். சீனிவாசன் மற்றும் இளநிலை அறிவியல் அலுவலர் எஸ். சதீஷ் ஆகியோர் நன்றி கூறினர்.
![]()





