விழுப்புரம், செப். 11-
பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணியை நீக்கி, நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி, 16 குற்றச்சாட்டகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் காலக்கெடு விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ராமதாஸ் அனுப்பிய நோட்டீசை பெற்றுக்கொண்ட அன்புமணி, செப்டம்பர் 10 ந்தேதி வரையான கெடு வரையில் எந்தவிதமான பதிலையும் அளிக்கவில்லை.
கட்சியில் இருந்தே நீக்கம்
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இன்று, திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-
பாட்டாளி மக்கள் கட்சியின் விதிகளுக்கு புறம்பாக நடந்து கொண்ட அன்புமணியிடம், 16 குற்றச்சாட்டுகை கூறி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தோம். ஆனால், நோட்டீசை பெற்றுக்கொண்ட அன்புமணி பதில் அளிக்கவில்லை. இதன் மூலம், நாங்கள் கூறிய குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதாக பொருளாகிறது. எனவே, குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காத அன்புமணியை பாமக செயல் தலைவர் பொறுப்பு மட்டுமின்றி, அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கி உத்தரவிடுகிறேன். இனி, அவருடன் கட்சியில் உள்ள யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது. அவர் விரும்பினால், வேறு கட்சி தொடங்கிக்கொள்ளலாம். எனது பெயரை அவர் பெயருக்கு பின்னால் பயன்படுத்தக்கூடாது. இரா என எனது பெயரின் முதலெழுத்தை மட்டுமே பயன்படுத்தலாம் எனவும் ராமதாஸ் அறிவித்துள்ளார். இது பாமகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
![]()





