செய்திகள்

அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Makkal Kural Official

மதுரை, ஜூலை.23-

சிவகங்கை அருகே போலீஸ் விசாரணையின் போது அடித்து கொல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவிலில் காவலாளியாக வேலைபார்த்து வந்தவர் அஜித்குமார் (வயது 29).

பேராசிரியை நிகிதா என்பவர் தனது நகை மாயமானதாக அளித்த புகாரின்பேரில் மானாமதுரை தனிப்படை போலீசார் அஜித்குமாரை விசாரணைக்காக அழைத்துச்சென்று அடித்துக்கொலை செய்தனர்.

இதுதொடர்பாக போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார், கோவில் ஊழியர்கள் பிரபு, வினோத்குமார், பிரவீன்குமார் மற்றும் அஜித்குமார் தாக்கப்படுவதை ரகசியமாக வீடியோ எடுத்த சக்தீஸ்வரன், ஆட்டோ டிரைவர் அருண்குமார் ஆகிய 6 பேரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று மதுரை அலுவலகத்தில் வைத்து 2-வது முறையாக விசாரணை நடத்தினர். பல மணி நேரம் விசாரணை நடந்தது.

இதற்கிடையே நேற்றும் திருப்புவனம் போலீஸ் நிலையம் சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமாரிடம் விசாரணை நடத்தி பல்வேறு விளக்கங்கள் பெற்றனர். பின்பு போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்தனர். மடப்புரம் கோவில் பகுதிக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் அங்குள்ள கடைக்காரர்கள், தனியார் கியாஸ் ஏஜென்சி மற்றும் கோவில் அருகே உள்ள திருமண மண்டபம் ஆகிய பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தரவுகளை பதிவு செய்து கொண்டனர்.

தட்டான்குளம் கண்மாய் அருகே உள்ள பகுதிக்கு சென்று ஒரு டீக்கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவின் வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து பதிவு செய்து கொண்டனர். அவற்றை திருப்புவனம் போலீசார் மற்றும் இன்ஸ்பெக்டரிடம் காண்பித்து மீண்டும் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் சி.பி.ஐ. துணை போலீஸ் சூப்பிரண்டு மோகித் குமார் தலைமையில் 4 அதிகாரிகள் நேற்று மாலை சிவகங்கையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அதாவது அஜித்குமாரை போலீசார் தாக்கியபின்னர், முதலில் திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் சிவகங்கையில் உள்ள இந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு தான் கொண்டு சென்றுள்ளனர்.

இதன் காரணமாக அன்றைய தினத்தில் என்ன நடந்தது? அஜித்குமாரை எந்த நிலையில் போலீசார் அழைத்து வந்தனர்? உள்ளிட்ட விவரங்களை அங்கிருந்த டாக்டர்கள், ஊழியர்கள் என பலரிடம் விசாரணை நடத்தி, அதிகாரிகள் கேட்டறிந்தனர். இதைத்தொடர்ந்து அஜித்குமாரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்த நாளில் அங்கு பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்துகொண்டனர்.

இதற்கிடையே அஜித்குமார் கொலை தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட், விசாரணை நடத்தி ஆகஸ்டு மாதம் 20-ந்தேதிக்குள் இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டு இருந்தது.

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது சம்பந்தமாக அரசு தரப்பில் பதில் அளிக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் அஜ்மல்கான் ஆஜராகி, ‘அஜித் குமார் மரணம் தொடர்பான வழக்கில் மதுரை ஐகோர்ட் உத்தரவின்படி சி.பி.ஐ.க்கு தேவையான அனைத்து ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டு விட்டன. மேலும் அஜித்குமார் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.7.50 லட்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இலவச வீட்டுமனை பட்டாவும் கொடுத்து உள்ளோம்’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘அஜித்குமார் வழக்கின் சாட்சிகளான நவீன்குமார், அருண், சக்தீஸ்வரன், பிரவீன்குமார் ஆகியோருக்கு சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோரிய மனுவை சம்பந்தப்பட்ட கோர்ட் 7 நாட்களுக்குள் விசாரித்து பாதுகாப்பு வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு ரூ.7½ லட்சம் இழப்பீடாகவும், அரசு வேலை, இலவச வீட்டு மனை ஆகியவற்றையும் வழங்கி உள்ளது.

இந்த இடைக்கால நிவாரணம் போதுமானதாக இல்லை. எனவே அஜித் குமார் குடும்பத்துக்கு மொத்தம் ரூ.25 லட்சம் இழப்பீட்டு தொகையாக வழங்க வேண்டும்.

கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் அஜித்குமார் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட கோர்ட்டை அணுகி உரிய நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்’ என்று உத்தரவிட்டு இந்த வழக்கை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 28-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *